முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்..!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லி லோதி சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியை அனுமதிக்கப்பட்டார்.
அப்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு இருந்தது உறுதியானது. எனவே அதற்கான சிகிச்சையும் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.
நோயை எதிர்த்து 21 நாட்களாக போராடி வந்த பிரணாப் முகர்ஜி நேற்று மாலை 4.30 மணி அளவில் தனது 84 ஆவது வயதில் உயிரிழந்தார். இராணுவ மருத்துவமனையில் இருந்த அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பாஜக தலைவர் நட்டா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், முப்படைகளின் தளபதிகள், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து டெல்லி லோதி சாலையில் உள்ள மின் மயானத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகளை அவரது மகன் மேற்கொண்டார். தொற்று பரவுவதை தடுக்க பிரணாப் முகர்ஜியின் குடும்பத்தினர் அனைவரும் முகக்கவசம் உள்ளிட்ட தற்காப்பு சாதனங்களை அணிந்தபடி இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.







