நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!
பொது முடக்கத்தால் நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து இதுவரை இல்லாத அளவாக நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்துள்ளது. புள்ளி விபரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் இயங்கும் தேசிய புள்ளி விபர அலுவலகம் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 3.1 சதவீதமாக இருந்தது. இந்த நிலையிலும் எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு உதாசீனப்படுத்தியதால் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பொருளாதாரம் மைனஸ் 24 சதவீதம் அளவுக்கு சரிந்து இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அதேநேரம் இந்த வீழ்ச்சியைக் கண்டு ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அசோசம் அமைப்பின் தலைவர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். கொரொனாவை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் மூன்று மாதங்களாக எந்த தொழிலும் இயங்கவில்லை என்றும் இதன் காரணமாகவே வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2015 – 2016 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.1 ஒன்றாக இருந்த நிலையில் அதன்பின் வந்த ஆண்டுகளில் சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. 2019 ஆம் ஆண்டின் பின் அந்த வளர்ச்சி பாதியாக குறைந்து அந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4 புள்ளி அளவில் குறைந்தது. 2019 – 2020 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் 3.1 சதவீதமாக இருந்தது.







