ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள்…!
ஓணம் பண்டிகைக்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஓணம் திருநாள் நம் அனைவரது வாழ்விலும் அமைதி, வளம், நல்லிணக்கம், ஆரோக்கியம் ஆகியவற்றை கொண்டு வரட்டும் என கூறியுள்ளார்.
மலையாள மொழி பேசும் மக்களால் சாதி, மத, பேதம் வைத்து கொண்டாடப்படும் திருவோணத் திருநாளில் அனைவரும் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓணம் திருநாளில் இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்.
மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கேரள மக்களின் பண்பாட்டுடனும், உணர்வுடனும் ஒன்றிப் போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மக்கள் கூட்டமாக சேராமல் ஓணம் திருநாளை தனிமனித இடைவெளியுடன் கொண்டாட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அனைவரது வாழ்விலும் இன்னல் நீங்கி வளமும் நலமும் நிறைந்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொது செயலாளர் டி டி வி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கொரொனா பாதிப்பிலிருந்து மனிதகுலம் மீண்டு விடும் என குறிப்பிட்டுள்ளார். உறுதியான உள்ளம் கொண்ட கேரள மக்கள் கொரொனா தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.







