--- --:--:-- --

வசந்தகுமார் எம்.பி.யின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்..! பல்லாயிரம் பேர் கண்ணீர் மல்க பங்கேற்ற இறுதி ஊர்வலம்!!

sdt

றைந்த கன்னியாகுமரி எம்.பி.யும், காங்கிரஸ் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அவரது தாய், தந்தையின் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் குமரி மாவட்ட மக்கள் கட்சி பேதமின்றி பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு தங்கள் மண்ணின் மைந்தனுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.

 

தனி ஒரு மனிதனாக இளம் வயதில் சொந்த தொழிலில் காலடி வைத்து வசந்த் அன் கோ என்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் எச்.வசந்தகுமார். தொழிலில் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் ஆரம்ப காலம் தொட்டு படிப்படியாக உயர்ந்து அரசியலிலும் உச்ச தொட்டவர். இரு முறை எம்.எல்.ஏ , தற்போது குமரி மக்களவை எம்.பி.யாகவும் இருந்து தொகுதி மக்களின் அன்பைப் பெற்ற எச்.வசந்தகுமார், நேற்று முன்தினம் உயிரிழந்தது அனைத்து தரப்பினரையும் பெரும் சோகத்தில்,அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிட்டது.

 

கொரோனா தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கிய போது, இந்த கொடிய வைரஸ் தாக்குதலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் கடந்த மார்ச் மாதம் குரல் கொடுத்தவர் வசந்தகுமார். அதே கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட வசந்தகுமார் கடைசியில் உயிரிழக்க, மக்களவையில் அவருடைய இறுதிப் பேச்சும் கொரோனா பற்றியதாகவே அமைந்து விட்டது தான் சோகத்திலும் சோகம்.

நேற்று முன் தினம் உயிரிழந்த வசந்தகுமாரின் உடல்
சொந்த ஊரான குமரி மாவட்டம் அகத்தீசுவரத்துக்கு நேற்று நள்ளிரவு கொண்டுவரப்பட்டது. வசந்தகுமாரின் மறைவால் குமரி மாவட்ட ஒட்டு மொத்த மக்களும் சோகக் கடலில் மூழ்கினர். அங்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மக்களவை உறுப்பினர் மாணிக் தாக்கூர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, குமரி மாவட்டச் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கட்சி பேதங்களை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

 

குடும்பத்தினரின் இறுதி அஞ்சலிக்குப் பின் வசந்தகுமாரின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக செல்லப் பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்தனர். வசந்தகுமார் குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்தில் சமுதாய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்த பின் வசந்தகுமாரின் உடல் அவரது தாய், தந்தை ஆகியோரின் கல்லறைகளுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அப்போது அங்கு குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கானோரும் சோகமே உருவாக கண்ணீர் மல்க தங்கள் மண்ணின் மைந்தனுக்கு பரியாவிடை கொடுத்த காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

 

Leave a Reply

Right Menu Icon