வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது..!
மறைந்த தொழிலதிபரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நிறுவன ஊழியர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி வசந்தகுமாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து அவரது உடல் குடும்பத்தினரின் விருப்பப்படி சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டது. செல்லும் வழியில் காமராஜர் அரங்க வளாகத்தில் வசந்தகுமாரின் உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக், புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் வழிநெடுகிலும் அவரது உடலுக்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தினார். நள்ளிரவு 12 மணி அளவில் வசந்தகுமார் உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள வீட்டில் வைக்கப்பட்டு அவரது உடலுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் வசந்தக்குமாரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.







