தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் 5980 பேர்… பல நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு 100-க்கு கீழே பதிவு…!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி உயிரிழப்பு பல நாட்களுக்கு பிறகு 100-க்கு கீழாக குறைந்து இன்று 80 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமே உள்ள நிலையில் இன்று 1294 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் சொல்லி வைத்தாற்போல் கடந்த பல நாட்களாகவே 6 ஆயிரத்திற்கும் சற்று குறைவு என்ற அளவிலேயே பதிவாகி வருகிறது.
இன்றைய நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நேற்று 5995 பேருக்கு தொற்று பதிவான நிலையில் இன்று ஒரே நாளில் 5980 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரையிலான மொத்த பாதிப்பு 3,73, 470 ஆக உயர்ந்துள்ளது.மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,603ஆகும். இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை13 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே தினசரி உயிரிழப்பு 100ஐ தாண்டி பதிவாகி வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது, நேற்று மட்டும் 101 பேர் உயிரிழந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 80 ஆக குறைந்துள்ளது. இதனால் இதுவரையிலான மொத்த பலி எண்ணிக்கை 6,420ஆக உயர்ந்து உள்ளது.
அதிக பாதிப்பு
சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. நேற்று 1282 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து 1294 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 406, கோவை 389, திருவள்ளூர் 384, கடலூர் 288, காஞ்சிபுரம் 257, என மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியாகியுள்ளது.







