சத்தீஸ்கர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிய சோனு சூட்..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டை இழந்த பழங்குடியின சிறுமி மழையில் சேதமடைந்த தனது புத்தகங்களை பார்த்து கதறி அழுகிறார். அந்த சிறுமிக்கு பல முனைகளிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது.
கோபாலா என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடியின சிறுமி அஞ்சலி அங்கு உள்ள பள்ளியில் படித்து வந்தார். மாவோயிஸ்டுகள் பூமியில் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதே பெரிய விஷயம். படிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சிறுமி ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று படித்தார்.
நர்ஸ் ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை அஞ்சலியின் லட்சியம். இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக பிஜப்பூர் மாவட்டத்தில் பேய் மழை பெய்தது. சிறுமி அஞ்சலியும், அவரின் பெற்றோரும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
மழை ஓய்ந்த பிறகு அஞ்சலி வீட்டிற்கு வந்த போது வீடு முற்றிலும் உடைந்து போய் கிடந்தது. வீட்டிலுள்ள பொருட்கள் சேதம் அடைந்து கிடந்தனர். ஆனால் சிறுமி அஞ்சலி சேதம் அடைந்து கிடந்த மற்ற பொருட்களை பார்த்து அழவும் இல்லை, கதறவும் இல்லை. ஆனால் தண்ணீரில் நனைந்து கிடந்த புத்தகங்களை கண்டதும் துடித்துப் போனார்.
பின்னர் கதறி அழுதவாறு சேதமடைந்த புத்தகங்களை அஞ்சலி எடுக்கும் துயர காட்சியை ஒருவர் சிறுமிக்கு தெரியாமலேயே வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட ஆதரவும் ஆறுதலும் குவிந்து வருகிறது.
உடனடியாக அஞ்சலிக்கு உதவிட நடவடிக்கை எடுக்கும்படி சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் பிஜப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரத்தில் அஞ்சலியின் வீட்டை சீரமைக்க ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
நர்சிங் கல்லூரியில் சேர்ந்து அஞ்சலி படிக்கவும் மாவட்ட நிர்வாகம் உதவி அளிக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அஞ்சலி சேதமடைந்த புத்தகத்தை பார்த்து அழும் வீடியோவை நடிகர் சோனு சூட் பார்த்துள்ளார்.
கண்ணீரைத் துடையுங்கள் சகோதரி உங்கள் வீடு புத்தகம் எல்லாமே புதியதாகக் கிடைக்கும் என்று ஆறுதல் கூறி இருந்தார் சோனு சூட். அப்படி கூறி வாய்மூடி இருக்கவில்லை அஞ்சலிக்கு எல்லாமே புதியதாக கிடைத்துவிட்டது.







