கொரொனா மறைமுகமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 உயிர்களை பலி வாங்கியுள்ளது..!
கொரொனா நேரடியாக மட்டுமல்ல மறைமுகமாகவும் உயிர்களை பறித்துவருகிறது. அதற்கு உதாரணமாக மாறியிருக்கிறது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு மூன்று மகன்கள்.
இவரது இளைய மகன் சசிகுமார் கடந்த மே மாதம் மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து வந்ததால் தனியார் கல்லூரி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டார் சசிகுமார். அவருக்குக் கொரொனா தொற்று இல்லை என்பதை சோதனையில் தெரிய வந்தது.
எனினும் தனிமைப்படுத்தப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான சசிகுமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த மணிகண்டனின் மனைவி ராமலட்சுமி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் இறந்து போனதால் வருத்தத்தில் இருந்த மணிகண்டனும் அவரது மூத்த மகன் வசந்தும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களை பறிகொடுத்துவிட்டு தவித்து வருகிறார் மணிகண்டனின் மற்றொரு மகன். கொரொனா தொற்று இல்லாமல் கொரொனாவின் பெயரால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







