திமுகவில் “இடி” முழங்கிய முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்..! கொரோனா தொற்று உயிரை கொள்ளை கொண்டது!!
ஆட்கொல்லி கொரோனா தொற்றுக்கு திமுகவில் மற்றொரு முக்கிய புள்ளியின் உயிர் பறி போயுள்ளது.திமுகவின் இடி முழக்கம் என்று போற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவர் ரகுமான்கான். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தின் போது, சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏவாக இருந்த ரகுமான் கான், எம்ஜிஆர் ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து முழக்கமிட்டவர்களில் ஒருவர். அக்காலக் கட்டத்தில் ரகுமான் கான், துரைமுருகன், க.சுப்பு ஆகிய 3 திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகளால் சட்டப்பேரவையே அடிக்கடி கலகலத்து விடும். இதனால் இந்த மும்மூர்த்திகளை இடி, மின்னல், மழை என்றே குறிப்பிடுவார்கள்.

இதே பட்டத்துடனே மூவரும் எம்.ஜி.ஆர், ஆட்சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஒரே மேடையில் முழக்கமிட்டது அன்றைய காலக்கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் திமுக ஆட்சியின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் ரகுமான்கான். திமுகவிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த ரகுமான் கான் வயது. முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் சற்றே ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் தான் உலகை மிரள வைத்துள்ள கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான ரகுமான் கான் தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்ற வந்தார். இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது திமுகவினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
ரகுமான்கான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.திமுக கொடிகள் 3 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







