--- --:--:-- --

“கட்சித் தலைமை ஒப்புதல் இன்றி யாரும் கருத்து கூறக்கூடாது” மீறினால் நடவடிக்கை பாயும்..! கூட்டாக அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்., இபிஎஸ்!!

16

??????????????????????????????????????????????????????????

திமுக நிர்வாகிகள் யாரும் கட்சியின் தலைமை ஒப்புதல் இல்லாமல், ஊடகங்களிலோ பத்திரிகைகளிலோ தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

வரும் சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ராஜேந்திர பாலாஜியும் இரு வேறு கருத்துக்களை கூறியது அதிமுகவில் பெரும் சலசலப்பையே ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் இன்று காலை தேனி மாவட்டத்தின் பல இடங்களில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சையை மேலும் சூடேற்றி விட்டது.

 

இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு படு அப்செட் ஆனதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மீண்டும் ஒரு மோதல் உருவாகுமோ? என்றும் அக்கட்சியில் பரபரப்பு தொற்றியது.

 

இதையடுத்து அதிமுக முக்கிய அமைச்சர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் தனியே ஆலோசனை நடத்தினர்.பின்னர் துணை முதல்வர் ஓபிஎஸ்சுடன் அவரது வீட்டில் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தி விட்டு நேராக முதல்வர் இபிஎஸ்சுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மீண்டும் ஒருமுறை ஓபிஎஸ், இபிஎஸ் வீடுகளுக்கு அடுத்த ஒரு ரவுண்டு பேச்சு வார்த்தை என அமைச்சர்கள் சுறுசுறுப்பு காட்டினர்.

 

இப்படி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக மூத்த அமைச்சர்கள் பலரும் அலைபாய்ந்ததையடுத்து அதிமுகவில் என்ன நடக்கிறது? என்ற விவாதம் தமிழக அரசியலில் சூடானது.

 

கடைசியில் அமைச்சர்களின் சமாதான முயற்சிக்கு வெற்றி கிட்டியது போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட 3 பக்க அறிக்கை வெளியானது. அந்த கூட்டறிக்கையில் இருவரும் கூறியிருப்பதாவது:அதிமுக என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்த இனிய நாள் நம் முன்னோர்களின் தியாகத்தாலும், உழைப்பாலும், தன்னலமற்ற தொண்டினாலும் மலர்ந்த பொன்னாளாகும்.

 

நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’’ என்ற ஜனநாயகக் கொள்கையை நமக்கு வழங்கிய நாள் இந்த நாள்.

 

நம் நாடு பெற்ற சுதந்திரமும், அரசியல் சாசனம் தந்த மக்களாட்சித் தத்துவமும் ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் பிடியிலோ, ஒரு குறிப்பிட்ட குழுவின் கைகளிலோ, வலிமை பெற்றவர்களின் கரங்களிலோ இந்த மக்களாட்சி முடங்கிவிடக் கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் நமது அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கம்.

 

எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் மீது கொண்ட பேரன்பினாலும், தமிழக மக்கள் தலைவர் மீது கொண்ட பாசத்தினாலும், நம்பிக்கையினாலும் அதிமுக உருவானது. அம்மா அவர்கள் 35 ஆண்டுகள் தனது உழைப்பையும், அறிவையும் இந்த இயக்கத்திற்காக வழங்கி, அதிமுக ஒப்பற்ற அரசியல் இயக்கமாக வளர்த்ததோடு, நம்மையெல்லாம் ஆளாக்கி, நம் கைகளில் தமிழ் நாடு அரசின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்.

 

என்னுடைய காலத்திற்குப் பிறகும் நூறு ஆண்டுகள் கழகம் ஆட்சியில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும், மகளிருக்காகவும் உழைத்துக்கொண்டே இருக்கும் என்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அம்மா சூளுரைத்தார்கள். இத்தனை பாரம்பரியம் மிக்க நம்முடைய இயக்கம் கழகத்தின் உறுப்பினர்களாகிய உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பாலும் உயர்ந்து கொண்டு வருகிறது.

 

எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரது கனவுகளை நனவாக்க, கழகத்தின் லட்சியங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க தமிழக அரசு இன்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதை அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர். நாம் தமிழக மக்களுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அதை நோக்கிய பயணத்தில் நாம் அனைவரும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

 

கடந்த நான்கு ஆண்டுகளாக அதிமுகவையும், அதிமுக ஆட்சியையும், எப்படி மாற்றாரும் பாராட்டும் வண்ணம் வழிநடத்தினோமோ அதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியைப் பெற நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது.

 

கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகளில் சிலர் எந்தப் பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட்டுவிடா வண்ணம் அம்மா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

 

கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், அம்மா காட்டிய வழியில் ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து, கட்சித் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும்.

 

எனவே, சிறு சலசலப்புகளுக்கும் இடம் தராமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒன்றுபட்டு உழைத்திட உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கட்சி உடன்பிறப்புகள் மக்கள் பணிகளிலும், கட்சிப் பணிகளிலும் மட்டுமே கவனம் செலுத்துங்கள். கட்சியை வெற்றிச் சிகரத்திற்கு இட்டுச்செல்ல உங்கள் பணிகள் மிகவும் இன்றியமையாதவை.

 

அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 

கருத்துப் பரிமாற்றங்களை செய்வதன்மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை. எனவே, ஊடக விவாதங்களில் கட்சி அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, அதிமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். மக்கள் என்றைக்கும், எம்ஜிஆர் மீதும், அம்மா மீதும் பேரன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த அன்பினை நாமும் பெற்றிருக்கிறோம் என்பதே திண்ணம்”.

 

என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன், இனிமேல் கட்சி விஷயங்களை வெளியில் பேசக்கூடாது என கட்சியின் அத்துனை நிர்வாகிகளுக்கும் தற்காலிகமாக வாய்ப்பூட்டு போட்டுள்ளனர் என்று கூறப்பட்டாலும் அதிமுகவில் சலசலப்பு ஓயுமா? என்பது சந்தேகம் தான் என்றே கூறப்படுகிறது.

 

Leave a Reply

Right Menu Icon