ஒவ்வொரு இந்தியருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும்..!
நாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழாவில் சுகாதாரத் துறைக்கான புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
சுகாதாரத்துறைக்கு தேசிய மின்னணு சுகாதாரத் திட்டம் என்ற புதிய திட்டத்தை மோடி அறிவித்தார். இதன் மூலம் மக்கள் அனைவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும் என்றும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
விரைவில் ஒவ்வொரு இந்தியருக்கும் கொரொனா தடுப்பூசி கிடைக்கும் என்றும் மோடி கூறினார். கொரொனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்ட மோடி இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்ப்பதாக கூறினார்.
உலகை வழி நடத்தக்கூடிய இடத்திற்கு இந்தியா வர வேண்டும் என்றும் அதற்கு நாம் தன்னிறைவு பெற வேண்டும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார். உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் என்றும் நாடு தன்னிறைவு பெறுவது ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா தன்னிறைவு பெற வேண்டுமானால் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறிய மோடி உழவர்களின் வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு புதிய ஊக்கத்தை அளித்து இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
பேருந்து, ரயில், விமானம் போன்ற பொதுப் போக்குவரத்துகள் ஒன்றிணைக்கப்பட்டு குறிப்பிட்ட பிரதமர் மக்களின் சேமிப்புகளை காக்கவே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டுவரப்பட்டதாக கூறினார்.
அடுத்த 1,000 நாட்களில் ஆறு லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். லடாக் பிரச்சனையில் தக்க பதிலடி தரப்பட்டு இருக்கிறது என்றும் யாரைக் கண்டும் இந்திய வீரர்கள் அச்சப்பட மாட்டார்கள் என்றும் மோடி கூறினார். அயோத்தி ராமர் கோவில் உருவாக்கத்தில் ஒற்றுமையாக செயல்பட்டதை போல பிற நடவடிக்கைகளிலும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
நம் முன் பல்வேறு சவால்கள் உள்ளன என்றும், அவற்றைத் தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம் இருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.






