10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : 100% தேர்ச்சி என அறிவிப்பு..! ஆனால் 5177 மாணவர்களின் முடிவு வெளியாகாததால் சர்ச்சை!!
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 100% தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் 5177 மாணவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்படாததால் அவர்களின் கதி என்ன? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தேர்வை நடத்தியே தீருவோம் என தமிழக அரசு பிடிவாதமாக இருந்தாலும் அதற்கான சூழல் உருவாகவில்லை. மற்ற வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது போல், 10-ம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இதனால் தமிழக அரசு தனது பிடிவாதத்தை தளர்த்தி தேர்வு ரத்து எனவும், அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படும் என உத்தரவிட்டது.காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பள்ளி வருகை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுமார் 9.45 லட்சம் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளி யிடப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 17 முதல் 21ஆம் தேதி வரை தங்கள் பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும், மதிப்பெண் பட்டியலில் சந்தேகம் இருந்தால் 17-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் முறையிடலாம் எனவும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே இன்றைய தேர்வு முடிவுகளில் 5177 மாணவர்களின் முடிவுகள் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணமும் கூறப்படவில்லை. அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படும் என தமிழக அரசு முன்கூட்டியே அறிவித்த நிலையில், தற்போது 5177 பேரின் முடிவு வெளியிடப்படாதது சம்பந்தப்பட்ட மாணவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் அந்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்றும் இந்த குளறுபடி ஏன் என்பதற்கு பள்ளிக்கல்வித் துறை உரிய விளக்கம் தர வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







