மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் 2 வது நாளாக வெள்ளப்பெருக்கு.பவானியம்மன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது !!!
கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக பில்லூர் அணை உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணை அதன் முழுக்கொள்ளளவான 100 அடியை எட்ட உள்ளது.
தற்போது அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 97 அடி நீர் இருப்பு உள்ளது. தற்போது அணைக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்தது.இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று 4 மதகுகளின் வழியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளான மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஓடந்துறை, சிறுமுகை, வச்சினம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்,பவானி ஆற்றில் குளிக்கவோ,துவைக்கவோ செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு தற்போது 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீரின் அளவை அப்படியே 4 மதகுகளின் வழியே திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் இரண்டாவது நாளான இன்றும் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பவானியம்மன் கோவில் நீரில் மூழ்கியுள்ளது.ஆற்றில் எப்போது வெள்ளம் ஏற்பட்டாலும் இக்கோவில் நீரில் மூழ்கும் என்பதும்,வெள்ள நீர் வடிந்த பின்பு மீண்டும் கோவில் பழைய நிலையிலேயே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






