ராஜீவ் காந்தி கொலை வழக்கு : பன்னோக்கு விசாரணை முகமை அறிக்கைக்கு ஆளுநர் காத்திருப்பு..!
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க பன்னோக்கு விசாரணையின் முகமையின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாய் அற்புதம்மாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த பேரறிவாளனுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் பரோல் வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது எழுவரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல் இருப்பது குறித்தும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கு நீதிபதி கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து ஜெயின் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பன்னோக்கு விசாரணை முகமை விசாரணை நடத்தி வருவதாகவும் 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால் பன்னோக்கு விசாரணை அதிகாரிகள் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்வதாகவும் விசாரணை நிலவரம் குறித்து தெரிவிப்பது இல்லை என்றும் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல் கோரி கடந்த மார்ச் மாதமே விண்ணப்பித்திருந்த நிலையில் அதன் மீது முடிவெடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்காததால் மனுதாரர் செலவு செய்து நீதிமன்றத்தை அணுகியுள்ளார் என்றும் இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் நேரமும் விரையம் ஆகியுள்ளதால் சிறைத் துறை அதிகாரிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க இருப்பதாக நீதிபதிகள் எச்சரித்தனர். பேரறிவாளனுக்கு பரவல் வழங்க கோரிய மனுவுக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.






