--- --:--:-- --

அதிக கடன் பெற்ற மாநிலமான தமிழகம்..! காரணம் என்ன?

10

நடப்பு 2020 – 2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை தமிழக அரசு 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனாக பெற்று உள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்பை விட அதிகமாகும். தமிழகத்தை தொடர்ந்து மஹாராஷ்டிரா 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

 

தமிழக அரசுக்கு ஒரு மாதத்திற்கு பெட்ரோல், டீசல் மதிப்புக் கூட்டுவரி, டாஸ்மாக் வருவாய், ஜிஎஸ்டி மாநில பங்கு ஆகியவற்றின் மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சராசரியாக கிடைக்கும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாகக் கொரொனா பொது முடக்கத்தால் இந்த வருவாய் பெருமளவு சரிந்துள்ளது.

 

இதனை ஈடுகட்டவே மாநில அரசு கடன் வாங்குவதை அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கிறார் பொருளாதார விமர்சகர் ஷ்யாம் சேகர். தற்போது மக்கள் பெரும் பிரச்சினையில் இருக்கும் போது அரசு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

 

இந்த நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 64 ஆயிரத்து 208 கோடி ரூபாய், ஓய்வூதியதாரர்களுக்கான தொகை 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் கடன் 4.5 லட்சம் கோடி ரூபாயில் இருக்கும் நிலையில் ஜிடிபி என்று சொல்லக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவதும் தமிழகம் வரும் காலங்களில் மிகப் பெரிய பொருளாதார பின்னடைவை சந்திக்க வழிவகுக்கும்.

 

அண்மையில் முதலமைச்சர் அளித்த பேட்டியில் இந்த நிதியாண்டில் அரசு நிதி பற்றாக்குறை 85 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று தெரிவித்து இருப்பதால் கடன் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon