சூரிய மின் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..!
21ம் நூற்றாண்டின் மிக முக்கியமான மின் ஆதாரமாக சூரிய சக்தி மின்சாரம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் 780 மெகாவாட் அல்ட்ரா மெகா சூரிய மின் நிலையத்தை நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி மூலம் அர்ப்பணித்தார்.
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் நிலையமாக இது 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 24 சதவீதத்தை டெல்லி மெட்ரோ நிறுவனம் பெறவுள்ளது. மீதமுள்ள 76 சதவீதம் மின்சாரம் மத்திய பிரதேசம் மின் பகிர்மான நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நர்மதா நதி மற்றும் வெள்ளை புலிகளுக்கு பெயர் பெற்ற மத்திய பிரதேசத்திற்கு புதிய பெருமையாக ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் சேர்ந்துள்ளது என்றார். 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மின்சாரமாக சூரிய மின்சக்தி இருக்கும் என்றும் இந்தியாவின் வளர்ச்சியை அதிகரித்து வரும் நிலையில் மின்சாரத் தேவையும் அதிகரித்து வருவதால் நாட்டின் மின் தேவையில் தன்னிறைவு அடைவது அவசியமானது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
எல்இடி மின் விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் 450 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவது தடுக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழலுக்கு இது மிகவும் முக்கியமானது எனவும் பிரதமர் தெரிவித்தார்.







