இம்ப்ரோ சித்த மருந்துப்பொடியை பரிசோதித்து அறிக்கை அளிக்க உத்தரவு..!
சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இம்புரோ எனும் மருந்து பொடியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் முடக்கத்தான் இலை, வெட்டி வேர், சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 66 மருத்துவ பொருட்களை கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இம்புரோ என்ற மருந்து பொடியை தயார் செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சித்த மருத்துவத்தின் அடிப்படையில் கொரொனாவிற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மருந்தை பரிசோதித்து முடிவுகளைத் தர ஆயுஷ் அமைச்சகத்தின் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கிலும் இம்ப்ரோ மருந்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக அரசு தரப்பில் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மருந்து பொடி தொடர்பாக பரிசோதிக்க சித்த மற்றும் ஆயுர்வேத கவுன்சிலுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும் இந்திய மருத்துவம் தொடர்பான மருந்துகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என தெரிய வருவதாகவும், இந்திய மருத்துவ முறைகளான மருந்துகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்குவது குறித்தும் மருந்துகளை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.







