--- --:--:-- --

உ.பி.யில் பயங்கரம் : போலீஸ் மீது ரவுடிகள் நடத்திய சரமாரி துப்பாக்கி சூடு… டி.எஸ்.பி., உள்பட 8 பேர் உயிரிழப்பு!!

1.1

உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸ் படையினர் மீது ரவுடியின் ஆட்கள் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் டி.எஸ்.பி, 3 எஸ்.ஐ.க்கள் உட்பட 8 போலீசார் உயிரிழந்த நிலையில், போலீசாரின் ஆயுதங்களை பறித்துக் கொண்டு தப்பியோடிய ரவுடிக் கும்பலை கண்டதும் சுட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார்.

 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இன்று அதிகாலை போலீஸ் மீது ரவுடிக் கும்பல் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்தவன் பிரபல ரவுடியான விகாஸ் துபே. இவன் மீது 60-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவன் தன்னுடன் பெரும் ரவுடிப் பட்டாளத்தை வைத்துக் கொண்டு அனைவரையும் மிரட்டி வந்துள்ளான்.

 

இது போல் ராகுல் திவாரி என்பவர், தமக்கு விகாஸ் துபே கொலை மிரட்டல் விடுப்பதாக கான்பூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து டி.எஸ்.பி.தேவேந்திர மிஸ்ரா தலைமையில் எஸ்.ஐ.க்கள், போலீசார் என 16 பேர் கொண்ட படையினர், இன்று அதிகாலை விகாஸ்துபேவை பிடிக்க, அவன் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிடச் சென்றனர் . ஆனால் போலீஸ் படை தம்மை கைது செய்ய வருவதை முன்கூட்டியே விகாஸ்து பேக்கு தெரிந்துவிட்டது போலும். போலீஸ் வரும் வழியில் ஜே.சி.பி. இயந்திரங்களை நிறுத்தி இடையூறு செய்த நிலையில், வீட்டின் மாடியில் இருந்து விகாஸ் துபேயின் ரவுடிக் கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினா.

 

இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத போலீசார் நிலை குலைந்து சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது, டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா,3 எஸ்.ஐ.க்கள் உட்பட 8 போலீசார் ரவுடிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக மற்ற போலீசாரும் படுகாயமடைந்தனர். உடனே போலீசாரிடம் இருந்த ஆயுதங்களையும் அபகரித்துக் கொண்டு ரவுடிக் கும்பல் தப்பியோடி விட்டது.

 

ரவுடியின் கும்பல் போலீஸ் மீது நடத்திய இந்த ரத்தக் களரி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிக் கும்பல் மீது தயவு தாட்சண்யம் பார்க்காது கண்டதும் சுட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், போலீஸ் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் போலீசார் கான்பூரைச் சுற்றியுள்ள 6 மாவட்டங்களின் எல்லைகளை சீல் வைத்து ரவுடிக் கும்பலை சுட்டுப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon