அமைச்சர் சரத்குமார் மீது காவல் ஆணையரிடம் புகார்
அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. த.வெ.க அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக உள்ள சரத்குமார், 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஒரு விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனத்துடன் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் சரத்குமார் இதுபற்றி விளக்கமளித்து விடியோ ஒன்றை வெளியிட்டார். எனினும் அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (ஜூன் 29) போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் சரண்யா என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.





