கோவையில் பொது முடக்கம் தேவையில்லை – மாவட்ட ஆட்சியர் ராசாமணி !!!
கோவையில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாவட்டம் முழுவதும் 400 ஆட்டோக்களை பயன்படுத்தி இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்த அவர், சமீப நாட்களில் கோவையில் கொரோனா தொற்று அதிகரிக்க வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் மூலமாகவே தொற்று ஏற்படுவதாக தெரிவித்தார்.
மேலும், கோவைக்கு வந்தவர்கள் 17 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறிய அவர், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் அறிவிப்பை மீறி வெளியே வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்,தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கோவையில் நாள்தோறும் 2000 பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று 12 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல கோவை மாவட்டத்திற்கு பொது முடக்கம் தேவையில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.மேலும், கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.






