ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி..!
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
பின்னர் மே மாதம் ஆர் எஸ் பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை அடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ் குமார் வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்கில் ஆர் எஸ் பாரதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுத்து குற்றப்பிரிவு காவல் துறையின் மனுவை தள்ளுபடி செய்தார்.






