தப்பியோடிய கைதிக்கு கொரோனா! தாமாகவே மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பினார்!
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரொனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் தொற்று இருப்பதை அறிந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் தாமாக மருத்துவமனைக்கு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ரமணா என்பவருக்கு கொரொனா பரிசோதனை எடுக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது தப்பியோடினார். பரிசோதனை முடிவில் தப்பியோடிய கைதி ரமணாவுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இவனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப் பட்ட நிலையில் ரமணா விழுப்புரம் மாவட்டம் கிடார் கிராமத்தில் உள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று இருப்பது தெரியவந்தது. புதுச்சேரி காவல் துறையினர் சென்று பார்த்தபோது ரமணா அங்கு இல்லாததால் அவரது உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ரமணாவுக்கு கொரொனா தொற்று இருப்பதை அவரது உறவினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து தாமாக மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பியதும் பின்னர் தெரியவந்தது.






