--- --:--:-- --

திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு சென்று நிவாரணத்தொகை வழங்காமல் கூட்டம் கூட்டிய ஊழியர்கள்!

10

சென்னை உட்பட முழு முடக்கம் அமலாகியுள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடு வீடாக ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. முழு பொது முடக்கம் அறிவித்திருக்கும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வீடுகளுக்கு வந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்காக ஒரே இடத்தில் மக்களை கூட்டியதால் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக்கொண்டு பணத்தை வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரொனாவை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும் கடந்த 19ஆம் தேதி முதல் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதற்காக 218 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி உள்ளனர். வரும் 26-ஆம் தேதி வரை பண வினியோகம் நடைபெறுவதால் ஐந்து நாட்களுக்கு ரேஷன் கடைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஆவடிப்பகுதியில் வீடுகளுக்கு சென்று உதவி தொகையை வழங்காமல் அங்கன்வாடி மையங்களில் ஏராளமான பொது மக்களைத் திரட்டிய பிறகு உதவித் தொகையை வழங்கினார். இதனால் ஏராளமானோர் முண்டியடித்துக் கொண்டு பணத்தை வாங்கி சென்றனர். தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் பணத்தை இவ்வாறு வழங்குவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon