சென்னையில் பொதுமுடக்க விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை!
சென்னையில் முழு பொது முடக்கத்தின் போது எந்தவித அனுமதியும் இன்றி வாகனங்களில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் 12 நாட்களில் மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகனம், ஆட்டோ, டாக்ஸி இயங்கு அனுமதிக்கப்படும் என்றும் வேறு எக்காரணத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வாகனத்தை பயன்படுத்தாமல் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்கலாம். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவினை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து உரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
சரக்கு வாகன போக்குவரத்து, தண்ணீர், பால், பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது. விமானம் மற்றும் ரயில் பயணிகள் தங்கள் பயணச் சீட்டுகளை உடன் வைத்திருக்க வேண்டும்.
முழு ஊரடங்கின் போது எந்தவித அனுமதியும் இன்றி வாகனங்களில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து இருக்கும் போக்குவரத்து காவல்துறை போலி அனுமதிச் சீட்டுகளை வைத்துள்ள வைத்து வாகனங்களை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உதவி செய்யும் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் இணைய தளத்தில் பதிவிட்டு இ பாஸ் பெற்றிருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் செல்வோர் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், சந்தேகங்களுக்கு 044 2345 2330 மற்றும் 90031 30103 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.







