பொதுமுடக்கத்தால் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கும் நடிகர் பரந்தாமன்!
அனைவரையும் சிரிக்க வைப்பதையே தொழிலாக கொண்டிருந்த நகைச்சுவைக் கலைஞர் ஒருவனின் வாழ்க்கையை கொரோனா மோசமாக புரட்டிப் போட்டுள்ளது. ஒட்டுமொத்த குடும்பமும் பல்வேறு சோதனைகளால் சூழப்பட்டிருக்கும் நிலையில் நிரந்தர வருமானம் கிடைக்க யாரேனும் உதவிக்கரம் நீட்டுவார்கள் என பரிதவிப்புடன் உள்ளார் நடிகர் பரந்தாமன்.
சிரிக்கவைக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் சோகம் சூழ்ந்து இருக்கும் என்பார்கள் அது கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி சிறந்த பரந்தாமனுக்கு முற்றிலும் பொருந்தும். உடல் வளர்ச்சி குன்றிய பிள்ளைகள், விபத்தில் கால் முறிவான தாய், சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ள மனநலம் குன்றிய தந்தை இதுதான் பரந்தாமன் குடும்பத்தின் வேதனைமிக்க பின்னணி.
தாயின் சொற்ப வருமானம் கை கொடுத்து வந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட விபத்து குடும்பத்தின் மொத்த சுமையையும் பரந்தாமன் மீது இறக்கியது. குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை கலைஞராக நடித்து போராடி வந்த பரந்தாமனை மேலும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது.
எவ்வித வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சிரிப்பு, மகிழ்ச்சி என்பது இந்த நகைச்சுவை கலைஞரின் குடும்பத்திற்கு கேள்விக்குறியாகியுள்ளது. வேதனைமிக்க தன் குடும்பத்தை காப்பாற்ற நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் யாரேனும் உதவுவார்களா என்பது பரந்தாமனின் ஏக்கமாக உள்ளது. சோதனை மிக்க குடும்ப பின்னணி, வேலை வாய்ப்பில்லாத கொடுமையான சூழலில் உள்ளார் பரந்தாமன்.






