--- --:--:-- --

மேட்டுப்பாளையம் அருகே முள்கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுத்தை.மீட்புப்பணிகளில் வனத்துறையினர் சுணக்கம் !!!

39

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட அறிவொளி நகர் சென்னாமலை கரடு பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் மோத்தேபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலையை சுற்றிலும் போடப்பட்டுள்ள முள்கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று போராடிக்கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

 

சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனத்துறையினர் விரைந்து சென்று கம்பி வேலியில் சிக்கியுள்ள சிறுத்தையை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.படுகாயங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் சிறுத்தை அருகே எவரும் செல்ல இயலவில்லை.இதனால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்க வனத்துறையினர் முடிவு செய்து மருத்துவர் சுகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கம்பி வேலியில் சிறுத்தை சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே காட்டுத்தீயாய் பரவ சிறுத்தையை காண மக்கள் ஆர்வத்துடன் வந்து சென்றனர்.படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து உரிய சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதன் பேரில் கூண்டு வைக்கப்பட்டு சிறுத்தை ஒன்று பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.மேலும்,இன்று காலை 10.30 மணிக்கு தகவல் தெரிந்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட வனத்துறையினரால் தற்போது வரை சிறுத்தையை மீட்க முடியவில்லை.படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டுள்ள சிறுத்தையை மீட்கும் பணியில் தொடர்ந்து சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon