துபாயிலிருந்து கர்ப்பிணி மனைவியை சொந்த ஊர் அனுப்பிய கணவன் மாரடைப்பால் உயிரிழப்பு!
கருவுற்ற மனைவியை துபாயிலிருந்து சொந்த ஊருக்கு பத்திரமாக திருப்பி அனுப்பிய கேரள இளைஞர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நித்தின் உயிரிழந்த மறுநாளே அவரது மனைவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியை சேர்ந்த நிதின், ஆதிரா என்ற இளம் தம்பதி துபாயில் பணியாற்றி வந்தனர்.
கருவுற்றிருந்த ஆதிராவுடன் சொந்த ஊர் திரும்ப எண்ணியிருந்த நிலையில் கொரொனா பரவலால் இந்தியாவின் பொது முடக்கம் அமலானது. எனினும் தனது மனைவியை மட்டுமாவது சொந்த ஊர் திரும்ப அனுமதிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றத்தை நாடினார். பின்னர் மே மாத தொடக்கத்தில் வந்த வந்தே பாரத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
ஆதிரா கேரளா திரும்பினார். நிதின் மட்டும் தனியாக இருந்த நிலையில் அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
கொரொனா தொற்று ஏற்படவில்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அவரது மனைவி ஆதிரா கேரளாவில் பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். ஆதிராவின் குழந்தையால் இனி எப்போதும் தனது தந்தையைப் பார்க்க முடியாமல் போனது.







