8 வழிச்சாலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்!
சென்னை – சேலம் இடையிலான 8 வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரான மேல்முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என கொரொனா பேரிடர் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு முறையிட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்க்கும் இந்த திட்டத்தில் இவ்வளவு அவசரம் காட்டுவது வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கக்கூடிய ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும் வரும் முன்பே எட்டு வழிச்சாலை பணி நடைபெறும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் கூறியிருப்பது அகங்காரத்தின் வெளிப்பாடு என்று தெரிவித்திருக்கிறார்.
எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை நிறைவேற்றுவதை உடனடியாகக் கைவிட்டு அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். இல்லையெனில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்று வழிகளில் செயல்படுவது குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் ஆக்கப்பூர்வமாக ஆலோசிக்க முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.






