--- --:--:-- --

வரும் ஜூன் 8 திங்கட்கிழமை முதல் முக கவசம் இன்றி வந்தால் ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் – கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு !!!

14

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ராசாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார் ஜடாவத் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

அப்போது, அவர் கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும், முக கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும்,கோவையில் சமீபகாலமாக முக கவசம் அணிவது இல்லை என்பதையும், சமூக இடைவெளி இல்லை என்பதையும் உணர்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும்,கோவை விமான நிலையத்திற்கு இதுவரை 54 விமானங்கள் வந்துள்ளது எனவும், இதில் வந்தவர்கள் 43 பேருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்தார்.மீண்டும் கொரோனா பரவி விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றோம் என தெரிவித்த அவர், வரும் திங்கட் கிழமை முதல் கோவையில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும்,வரும் ஜூன் 8 திங்கட்கிழமை முதல் முக கவசம் இன்றி வந்தால் ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், சமூக இடைவெளி இன்றி இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.எந்த இடத்தில் சமூக இடைவெளி இல்லாமல் இருக்கின்றதோ அந்த நிறுவன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், கோவையில் சுமார் 4000 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் எனவும்,அவர்கள் வெளியில் வந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த போது பயமில்லாத சூழல் இருந்தது என தெரிவித்த மாவட்ட ஆட்சியர் ,கொரோனா வைரஸ் தன்மை சமீபத்தில் மாறியுள்ளது எனவும் இதை மக்கள் உணர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,இவ்விஷயத்தில் பொது மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது எனவும், பொது வெளியில் வரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர், முக கவசம் அணியாமல் இருந்ததற்காக மாநகராட்சி இது வரை 4 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளது எனவும் தெரிவித்தார். கோவையில் இது வரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 29 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் இதில் 3 பேருக்கு சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon