ஐ.நா. நல்லெண்ண தூதராக நேத்ரா தேர்வானதற்கு ஆளுநர் பன்வாரிலால் பாராட்டு!
ஐநாவின் நல்லெண்ண தூதராக மதுரையை சேர்ந்த மாணவி நேத்ரா நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் தனது மகள் நேத்ராவின் கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பகிர்ந்தளித்தது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார்.
மோகன் போன்ற விசாலமான மனம் கொண்டவர்களால் மட்டுமே சொந்த தேவைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை சமூக நலனுக்காக செலவிட முடியும் என்றும் ஐநாவில் உரையாற்றுவதற்கு அவரது மகளுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த பெருமைக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
நெருக்கடியான காலகட்டத்திலும் மற்றவர்களுக்கு உதவிய சலூன் கடை உரிமையாளர் மற்றும் அவரது மகள் நேத்ராவும் முன்னுதாரணமாக இருக்கின்றனர் என்றும் அவரது குடும்பத்தை வெகுவாக பாராட்டுவதாகவும் ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.






