--- --:--:-- --

வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்!

8.1

சென்னையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மண்டலங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஸ்டாலின் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மிகமிக அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

 

கொரொனா பாதிப்பு மற்றும் இறப்பு தொடர்பாக அரசு முழுமையான தகவல்களை வெளியிடுவது இல்லை என எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு அரசு பதில் சொல்லாமல் இருப்பதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

 

மருத்துவர்களையும், செவிலியர்களையும் அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளுக்கு செவி மடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கும் அவர் சென்னையில் வாகன போக்குவரத்து என்பது நெரிசல் மிகுந்ததாக உள்ளது என்றால் இதுதான் ஊரடங்கும், 144 தடையும் அமலில் இருக்கும் லட்சணமா என்றும் வினவியுள்ளார்.

ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை ஆகிய ஐந்து மண்டலங்களையும் கடுமையான அரண் அமைத்து காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்று கூறியிருக்கும் ஸ்டாலின் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் அனைவருக்கும் வீடு வீடாக பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

 

அதிகமாக பாதிக்கப்பட்ட 5 மண்டலங்களையும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு தேவையான பொருட்களை அரசே வழங்க வேண்டும். அந்த பகுதிக்குள் வெளியார் யாரும் நுழைய முடியாதபடி கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon