புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
சொந்த மாநிலங்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் தமிழகத்தில் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, மருத்துவம், இருப்பிட வசதி கிடைப்பதை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரொனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள குப்பாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உள்ளிட்ட நானுற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அனுப்பப்பட்டவர்கள் மற்றும் அனுப்பப்பட வேண்டிய வர்களின் எண்ணிக்கை மத்திய மற்றும் பிற மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர்.


இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை அளிக்க அவகாசம் கேட்கப்பட்டதால் விசாரணை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய உணவு வழங்கப்படவில்லை என்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் ரயில் நிலையங்களில் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உணவு,இருப்பிடம், மருத்துவ வசதி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.






