அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள் மீது பூ தூவிய ஹெலிகாப்டர்கள்!
கொரொனா தடுப்பு பணியில் முன் களத்திலிருந்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு முப்படைகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மலர்களை தூவி நன்றி தெரிவித்த நிலையில் மருத்துவமனை வளாகங்களில் பேண்ட் வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.
மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அரசு அதிகாரிகள் காவல்துறையினர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மூன்று எஸ்யு 30 வகை விமானங்கள் ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் நோக்கி சென்றன. சண்டிகர், டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை, ஹைதராபாத் நகரங்களில் மேல் இந்த விமானங்கள் பறந்து சென்றன.

இதேபோல அசாமில் திப்பூரிலிருந்து, குஜராத்தின் கட்ச் பகுதி நோக்கியும் விமானங்கள் பறந்தன. இது தவிர நாட்டின் பல்வேறு அரசு மருத்துவமனைகள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவி மருத்துவ பணியாளர்களுக்கு நன்றியை பறைசாற்றின. கோவாவின் பனாஜி, ஹரியானாவின் பஞ்ச்குலா ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர்களைத் தூவின.
இதேபோல காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச் சின்னங்கள் மீதும் ஹெலிகாப்டர்கள் மூலமும் மலர்கள் தூவப்பட்டன. ஹரியானாவின் பஞ்ச்குலா மருத்துவமனையில் இந்திய ராணுவத்தின் பேண்ட் இசை குழுவினர் இசை இசைத்து மருத்துவ பணியாளர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.






