--- --:--:-- --

“உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு!!”.. உறுதியளித்த அமித் ஷா..! “ஒயிட் அலர்ட்” போராட்டத்தை கைவிடுவதாக டாக்டர்கள் அறிவிப்பு!!

IMG-20200422-WA0153

தங்கள் மீதான தொடர் தாக்குதல்களைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று இரவு ஒயிட் அலர்ட் என்னும் நூதன அடையாள போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த மருத்துவர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறுதி மொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

 

கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளிக்கும் பணியில் இரவு பகல் பாராது மருத்துவர்களும், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இதில் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.

 

இப்படி அர்ப்பணிப்புடன் பணியாற்றும் டாக்டர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் சிகிச்சை வழங்கும் மருத்துவர்களை, ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்குவது, மரியாதைக்குறைவாக நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 

மேலும் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி, உயிரிழந்த மருத்துவரின் உடல் அடக்கத்தின் போது நடந்த வன்முறைச் சம்பவம், நாடு முழுவதும் மருத்துவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

 

இதனால், தங்களது எதிர்ப்பை அடையாளமாக காட்டும் வகையில், இன்று இரவு ஒயிட் அலர்ட் என்னும் நூதன போராட்டத்திற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதாவது மருத்துவர்களின் அடையாளமாக திகழும் வெள்ளை நிற கோட் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒயிட் அலர்ட் போராட்டம் நாடு முழுவதும் இன்று இரவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர், இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவசர பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, மருத்துவர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உறுதியேற்கும் என்றும், கண்ணியம் மரியாதையுடன் நடத்த உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.

 

மேலும் கொரோனா வைரஸ் தொற்றால், தாடு இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் மருத்துவர்களின் அளப்பரிய பணிகளை பாராட்டிய அமித்ஷா, இந்த நேரத்தில் போராட்டம் எந்த வடிவிலும் நடத்துவது உகந்தது அல்ல என்று கூறி, போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

 

மத்திய அரசு உங்கள் பின்னால் நிற்கும் என்று அமித் ஷா உறுதியளித்ததைத் தொடர்ந்து, இன்று, நாடு தழுவிய அளவில் நடத்துவதாக இருந்த ஒயிட் அலர்ட் நூதனப் போராட்டத்தை கைவிடுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon