கொரோனா படையெடுப்பு : உலகின் மிகப்பெரும் குடிசைப்பகுதியான மும்பை தாராவி முழுவதும் சீல் வைப்பு..! 4 லட்சம் தமிழர்கள் தத்தளிப்பு!!
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி குடிசைப் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதைத் தொடர்ந்து 7.5 லட்சம் பேர் வசிக்கும் அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா தான். இங்கு ஏறத்தாழ 2000 பேர் பாதிப்புக்கு ஆளான நிலையில் உயிரிழப்பும் 100 ஐ கடந்துள்ளது. அதிலும் மகாராஷ்டிர மாநில தலைநகராகவும், இந்தியாவின் வர்த்தக தலைநகராகவும் விளங்கும் மும்பை நகரில் தான் கொரோனாவின் கோரத் தாண்டவம் உச்சத்தை அடைந்துள்ளது.
இதில், உலகின் மிகப் பெரும் குடிசைப் பகுதி என அழைக்கப்படும் தாராவி குடிசைப் பகுதியில், கடந்த 3 தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்தக் குடிசைப் பகுதியில் ஜன நெருக்கம் மிக மிக அதிகம். குறைந்த பரப்பில் குடிசைகளையே அடுக்குமாடி குடியிருப்பு போல் அமைத்து 7.5 லட்சம் பேர் நெருக்கடித்து வசித்து வருகின்றனர்.இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள் ஆவர். கிட்டத்தட்ட 4 லட்சம் தமிழர்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே அன்றாடக் கூலிகள் மற்றும் சிறுதொழில் மற்றும் சாலையோர வியாபாரிகள் தான்.

மும்பையில் முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது தாராவி பகுதியில் பாதிப்பில்லாமல் தான் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதியான நிலையில், தொடர்ந்து பலருக்கும் அறிகுறி உறுதியானதுடன் உயிரிழப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று வரை நோய்த் தொற்று பாதிப்பு 28 ஆகவும், பலி எண்ணிக்கை 4 ஆகவும் இருந்த நிலையில் இன்று காலை மேலும் 15 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 43 ஆக அதிகரித்தது.
இதனால், ஜன நெருக்கடி மிகுந்த தாராவி குடிசைப் பகுதியில் கொரோனா தொற்று பல மடங்கு உயரும் பட்சத்தில் மும்பை முழுவதுமே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தாராவி குடிசைப் பகுதி முழுவதையும் சீல் வைத்து யாரும் வெளியே வராத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தாரா வி குடிசைப் பகுதியில் வசிக்கும் 7.5 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது,






