அயர்லாந்து பிரதமர் மருத்துவராக மாறி.. கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை!
உலகெங்கும் உள்ள நாடுகள் கொடூரக் கொரொனா வைரஸை எப்படி அழிப்பது, மக்களை எப்படி காப்பது என்று திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் வேளையில் பாதிக்கப்பட்டவர்களை காக்க களத்தில் குதித்திருக்கிறார் அயர்லாந்தின் பிரதமர் லியோ. அயர்லாந்து நாட்டு மக்களை மட்டுமல்ல, இந்தியாவையும் பெருமை அடைய வைத்திருக்கிறது இந்த நிகழ்வு.
இதற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகம் இந்த இடத்தில் வரலாம். அயர்லாந்து பிரதமர் லியோ இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மும்பையை பூர்வீகமாக கொண்ட அசோக் மகன்தான் லியோ. லியோ பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை 1960-களில் மருத்துவராக பணியாற்றுவதற்காக அயர்லாந்துக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
கொரொனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாட்டின் தலைவர்கள் பல திட்டங்களை வகுத்து கொண்டிருக்கின்றனர். கொரொனா வைரஸ் நெருக்கடி காலத்தில் சுகாதார சேவைக்கு உதவ வேலை மாற்றங்களை வழங்க முன்வந்தார். எனவே பிரதமராக மட்டுமில்லாமல் ஒரு மருத்துவராகவும் தனது சேவையைச் செய்ய மருத்துவ சேவை குழுக்களோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பாக மருத்துவராக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் லியோ. பின்னர் 2014ஆம் ஆண்டு அவர் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதற்கு ஒரு வருடம் முன்பு தனது மருத்துவ தொழிலை விட்டு வெளியேறினார் .ஆனால் தற்போது அயர்லாந்தில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரொனாவை அழிக்கவும், மக்களைக் காக்கவும் மீண்டும் டாக்டராக லியோ பதிவுசெய்துள்ளார்.
பிரதமரின் பணிகளுக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாதவாறு வாராந்திர ஷிப்டுகளில் பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்த சமயங்களில் தொலைபேசி வாயிலாக அரசை நிர்வகிக்கவும் திட்டங்களை தீட்டியுள்ளார். முன்னாள் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மீண்டும் சேவையாற்ற வந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்த கையோடு தானும் களத்தில் குதித்துள்ளார்.
லியோவின் இந்த முன்னெடுப்பால் மருத்துவர்கள், செவிலியர்கள் பலரும் மீண்டும் தங்களது சேவைகளை அளிக்க முன் வந்திருக்கின்றனர். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தான் அரசியல்வாதிகள் என்பதும் அதற்கு சேவை மனப்பான்மை தான் வேண்டுமே தவிர வேறு எதுவும் தேவையில்லை என்பதையும் உலகிற்கே காட்டிய இந்திய வம்சாவளியை சேர்ந்தவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன .






