கொரோனா முன்னெச்சரிக்கையில்ராணுவத்தை களமிறக்க திட்டம்? முப்படை தளபதிகள் இன்று முக்கிய முடிவு!!
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாடு முழுவதும் ராணுவத்தை களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக முப்படைகளின் தளபதிகள் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதல், முதலில் சீனாவை பதம் பார்த்தது. தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய நாடுகளை கதிகலங்க வைத்த நிலையில், இப்போது அமெரிக்காவை உலுக்கி வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரவி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்து, உலக அளவில் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
அதே போல் அமெரிக்காவில் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து 1300 ஐ கடந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் உச்ச கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், வைரஸ் பரவல் அதிகரித்தே வருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவிலும் வரும் நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகமாக இருக்கும் என கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே தான் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்தவே இந்த ஊரடங்கு என்றாலும், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அதிக அளவில் வெளியில் வருவதை தடுப்பது பெரும் சிரமமாக உள்ளது. போலீசார் அவர்களை தடிகளால் அடித்து விரட்டினாலும் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாகவே உள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் நாட்கள் கொரோனா பரவலை தடுப்பதற்கான மிக முக்கியமான நாட்கள் என்பதால், நாடு முழுவதும் ரோந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் பணியில் ராணுவத்தை ஈடு படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முப்படைகளின் தளபதிகள் மற்றும் முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று முப்படைகளின் தளபதிகளும் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். அப்போது கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கை முன்னிட்டு முடங்கியுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ராணுவத்தை களமிறக்குவது பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.






