--- --:--:-- --

144 தடை உத்தரவு எதிரொலி : சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்..! சென்னையில் பேருந்து கிடைக்காமல் திண்டாட்டம்!!

29

நாளை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு என்ற அறிவிப்பு வெளியானவுடனே சென்னை மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், சிறுதொழில் செய்வோர் என பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குவிய போதிய பேருந்து கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

 

கொரானோ வைரஸ் பரவுவதைத் திக்க பொது இடங்களில் கூட்டமாக கூடக் கூடாது என்பதற்காகத்தான் பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கெடுபிடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழக அரசின் திடீர் 144 தடை உத்தரவு அறிவிப்பால், மக்கள் கூடக் கூடாது என்பதற்கு நேர்மாறாக மக்கள் திருவிழா கூட்டம் போல மார்க்கெட்டுகள், பேருந்து நிலையங்களில் அலைமோதத் தொடங்கி விட்டரை்.

 

இன்று தமிழக சட்டப்பேரவையில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தாவு என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். பேருந்துகளும் நாளை மாலையுடன் நிறுத்தப்படும் என்று அறிவித்த முதல்வர், அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி, பால், மருந்து. போன்றவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால், ஒரு வாரம் 144 தடை உத்தரவு என்ற அறிவிப்பால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் தங்கி பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.சென்னையில் கோயம்பேடு, பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிய ஆரம்பித்தனர். ஆனால் போதிய பேருந்துகள் கிடைக்காமல் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும், மேலும் கூட்டம் அதிகமாக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 

இதே போன்ற நிலையே தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் நிலவி, ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையங்களில் குவிந்து வருகிறார்கள்.இது மட்டுமின்றி காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள் குவிந்து வருவதால் தமிழகம் முழுவதுமே பெரும் பரபரப்பு நிலவுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon