“தனிமையில் இருக்க வேண்டியவர்கள் ஊர் சுற்றுவது அச்சுறுத்தலாக உள்ளது!!” அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதங்கம்!!
கொரானோ பரவலை கட்டுப்படுத்த தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் வீட்டில் இருக்காமல் ஊர் சுற்றுவது பெரும் அச்சறுத்தலாக உள்ளது சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.மேலும் இவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ள காகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக பீதியை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரஸ் பரவல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. நெல்லை, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மேலும் சிலருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரானோ முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக சுகாதாரத் துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. துறையின் அமைச்சர் விஜயபாஸ்கரும் ஓய்வின்றி பம்பரமாக சுழன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார். மேலும், கொரானோ தொடர்பாக அன்றாட நிலவரங்களையும் செய்தியாளர்களிடம் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த சிலருக்கு கொரானோ அறிகுறி கண்டறியப்பட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தியும், வெளியில் சுற்றுகிறார்கள். அப்படி அவர்கள் வெளியே சுற்றுவது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என கவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,தனிமையில் இருக்க வேண்டும் என்ற அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்படி அரசின் அறிவுரைகளை மீறிய நபர்களின் பட்டியல் விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.







