“10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!!” ஏப்.,14-ந் தேதிக்கு பின் நடத்தப்படும்..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
கொரானா அச்சுறுத்தல் காரணமாக வரும் 27-ந் தேதி தொடங்குவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் 9-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஆனால் 10, 11, 12, வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஆனால் பத்தாம் வகுப்பு தேதி முதல் தான் தொடங்க உள்ளன.
இதனால்,தற்போது கொரானா அச்சம் அதிகரித்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாளை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கும் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், கொரானா அச்சம் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இந்நிலையில், கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கையாக 9.45 லட்சம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் 27 ந் தேதி தொடங்க இருந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பிறகு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







