--- --:--:-- --

கொரானாவால் உலக நாடுகள் உறைந்து கிடக்க… “ஏவுகணை” சோதனை நடத்தி “வாண வேடிக்கை” காட்டிய வடகொரியா!!

4

உலக நாடுகள் எல்லாம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அலறிக் கிடக்கும் நிலையில், வட கொரியாவோ, நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்பது போல இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்திய செயல் அண்டை நாடுகளை மேலும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.

 

வட கொரியா.. இந்த நாட்டின் அதிபர் கிம் ஜோங்-உன் .சர்வாதிகாரி போல் செயல்படுபவர். இரும்புத் திரை நாடு என்றே இந்நாட்டை கூறலாம். ஆசியக் கண்டத்தில் சீனாவை ஒட்டியுள்ள வடகொரியா, நீண்ட காலமாக தென் கொரியா oற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது.

 

அணு ஆயுதங்களையும் ஏராளமாக குவித்து வரும் வட கொரியா, அமெரிக்கா விடுத்த எந்த எச்சரிக்கைகளுக்கும் பணிந்தது கிடையாது. இதனால் ஏகப்பட்ட பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. உலகின் பிற நாடுகளையும் கூட்டுக்கு சேர்ந்து கொண்டு வட கொரியாவை தனிமைப்படுத்த முயன்றது அமெரிக்கா. ஆனால், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவ்வப்போது வாண வேடிக்கை நடத்துவது போல், ரக ,ரகமாக ஏவுகணைகளை ஏவி சோதித்துப் பார்த்து அண்டை நாடுகளுக்கு பீதி கிளப்புவதே வடகொரியாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. மேலும் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதே உலக நாடுகளுக்கு தெரியாத வகையில் ரகசியம் மிக்க நாடாக திகழ்கிறது. ஏனெனில் வடகொரியாவுக்குள் மற்ற நாடுகளைச் சேர்ந்த யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. பிற நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் வேறு.

 

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக அண்டை நாடான சீனா, கொரானாவால் சின்னாபின்னமானது. அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் கொரானாவால் அலற ஆரம்பித்தன. இதனால், சீனாவின் ஒரு பகுதி எல்லையில் அமைந்துள்ள வட கொரியாவிலும் கொரானா தாக்கம் இல்லாமலா போய்விடும் என உலக நாடுகள் உற்று நோக்கின. ஆனால் வடகொரியாவோ தங்களுக்கு ஒன்றுமே பாதிப்பில்லை என்பது போல மூச்சு விடாமல் இருந்து வந்தது. வடகொரியாவில் ஒரு நபருக்கு கொரானா தொற்று உறுதியானதாகவும், ஆனால் எந்த நபரை அடுத்த நிமிடமே ஈவு இரக்கமின்றி அட்டுக் கொல்லுமாறு அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டதாகவும் கூட செய்திகள் கசிந்தன.

ஆனாலும் கொரானா பற்றி மூச்சுக் காட்டவில்லை வட கொரியா. இதனால் உலக சுகாதார நிறுவனம், உலக நாடுகள் பலவற்றிலும் கொரானா பாதிப்பு தொடர்பாக தினமும் வெளியிடும் பட்டியலிலும் வடகொரியாவின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் வடகொரியாவில் கொரானா அச்சுறுத்த வே இல்லையா? என்ற ரீதியில் உலக நாடுகள் உற்று நோக்கி வந்தன.

 

இந்நிலையில் தான், கொரானாவா? அதெல்லாம் எங்களை அண்டவே அண்டாது என்பது போல இன்று வடகொரியா அரங்கேற்றிய செயல் , கொரானா தாக்குதலில் உறைந்து போயுள்ள பக்கத்து நாடான தென் கொரியாவை மேலும் பீதிக்குள்ளாக்கி விட்டது.இன்று அதிகாலையில் அடுத்தடுத்து இரு ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை நடத்தியது தான் தென் கொரியாவுக்கு பீதி ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படி வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதை உறுதி செய்த தென் கொரிய ராணுவம்,
குறைந்த தூர இலக்குகளை தாக்கவல்ல பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளாக இருக்கக் கூடும் என்று கூறியுள்ளது.உள்ளூர் நேரப்படி, இன்று (சனிக்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுகணை பரிசோதனைக்கு பிறகு, வேறு ஏதாவது பரிசோதனைகள் நடத்தப்படுகிறதா? என்று கூர்ந்து கண்காணித்து வருவதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதே போல தங்களது நாட்டின் கடல்பரப்பில் ஏவுகணை ஒன்று வந்து விழுந்ததாக ஜப்பானின் கடலோர காவல்படையும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

இது போலவே, இந்த மாதத்தின் தொடக்கத்திலும் வட கொரியா பல ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. இதைத்தொடர்ந்து வட கொரியா தனது அணு மற்றும் ஏவுகணை செயல்பாடுகளை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டுமென்று அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்தாலும் வட கொரியா கண்டு கொள்ளவில்லை.

 

உலக நாடுகள் அனைத்தும் கொரானா வைரஸ் பாதிப்பால், அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மும்முரமாக உள்ளன.இந்நிலையில் எங்களுக்கெல்லாம் கொரானா பாதிப்பு கிடையாது என்ற ரீதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வாண வேடிக்கை நடத்தியுள்ள செயலை உலக நாடுகள் ஆச்சர்யத்துடனும், அச்சத்துடனும் உற்று நோக்கி வருகின்றன.

Leave a Reply

Right Menu Icon