கே.பி.முனுசாமி..தம்பிதுரை… ஜி.கே.வாசன் எம்.பி.யாகிறார்கள்..! ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!!
3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கும், கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது .இந்த 6 இடங்களுக்கும் வரும் 27-ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய 13-ம் தேதி கடைசி நாளாகும்.
தமிழக சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் பலம் அடிப்படையில் இந்த ஆறு இடங்களில் அதிமுகவுக்கு மூன்று இடங்களும் திமுகவுக்கு மூன்று இடங்களும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்கள் யார் என்பதில் இழுபறியாக இருந்தது. இதற்கு காரணம் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என முரண்டு பிடித்து வந்தது. மேலும் அதிமுகவிலேயே தலைவர்கள் பலரும் எம்பி இடங்களுக்காக பெரும் நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக தலைமைக் கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை அமைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி முனுசாமி, மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பித்துரை ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனா. மற்றொரு இடத்துக்கு அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் தேமுதிக ஒரு இடம் கேட்டு கடைசிவரை நெருக்கடி கொடுத்த நிலையில், அதிமுக அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. மற்றொரு கூட்டணிக் கட்சியான தமாகா கட்சியின் தலைவர் ஜிகே வாசனுக்கு வழங்கியுள்ளதால் தேமுதிக கடும் அதிருப்தி அடைந்துள்ளது என்றே தெரிகிறது. இதனால் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது .

அதிமுகவில் இவர்தான் வேட்பாளர் என நமது குற்றம் குற்றமே இணையதளத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமிக்கும், இபிஎஸ் தரப்பில் மு.தம்பிதுரைக்கும் வழங்கப்படும் என்றும் மற்றொரு அதிர்ஷ்டசாலி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் என குறிப்பிட்டிருந்தோம். அதன்படியே இன்று பட்டியல் வெளியிட்டுள்ள வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.






