23 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடர்..! 110 விதியின் கீழ் அறிவிப்புகளை அள்ளி வீசுவாரா முதல்வர் எடப்பாடி?
தமிழக சட்டப்பேரவை, பல்வேறு மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக இன்று கூடுகிறது. அடுத்த மாதம் 9-ந் தேதி வரை 23 நாட்களுக்கு நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறாத நிலையில், 110 விதியின் கீழ் பல்வேறு சலுகைகள், திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து தாராளம் காட்டுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் 2020-20 21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த மாதம் 14-ந் தேதி தாக்கல் செய்தார். அடுத்தாண்டு சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய அதிமுக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட் இதுதான். இதனால் பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள், சலுகைகள் இடம்பெறும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் சுமை தான் 4.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதே தவிர, புதிய அறிவிப்புகள் எதுவுமே இல்லாமல் வெறும் சம்பிரதாய பட்ஜெட்டாக அமைந்து விட்டது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் அதன் மீதான விவாதம் நடைபெற்று முடிந்து சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 9-ந் தேதி வரை 23 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்று சட்டப் பேரவை கூடியவுடன் மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் 1957 முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாகவும் 4 முறை அமைச்சராகவும், ஒரு முறை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த க.அன்பழகனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டவுடன், தற்போதைய சட்டப் பேரவையில் உறுப்பினர்களாக இருந்து சமீபத்தில் மறைந்த திருவொற்றியூர் கே.பி.பி.சாமி, குடியாத்தம் காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றைய சட்டசபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் .
📱 Share on WhatsApp 𝕏 Share on Xநாளை மறுதினம் முதல் 23 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று. அத்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கப்படும். தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால், தினமும் 110 விதியின் கீழ் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள், சலுகைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று குடியுரிமை திருத்தச் சட்டம், குடியுரிமை பதிவேடு’ தேசிய மக்கள் கணக்கெடுப்பு போன்ற விவகாரங்களில், எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் மற்றும் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால் இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என்றே கூறலாம்.





