“கட்சி பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை..!!” சம்பிரதாயத்துக்கு நடந்த ரஜினியின் ஆலோசனை..! மன்ற நிர்வாகிகள் மீண்டும் ஏமாற்றம்!!
அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது மக்கள் மன்ற மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனால் கட்சி தொடங்குவது பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் மன்ற நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகள், எச்சரிக்கைகள் விடுத்து விட்டு காரில் பறந்து விட்டார் ரஜினி. இதனால் அவருடைய ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, கடந்த 25 ஆண்டு காலமாகவே அரசியலுக்கு வரப்போவது போல பாவ்லா காட்டி வந்தார். ஒரு வழியாக கடந்த 2017-ல்
அரசியலுக்கு வரப்போகிறேன் என்ற அறிவிப்பு வெளியிட்ட ரஜினி, 2021 சட்டப்பேரவை தேர்தல் தான் தமது இலக்கு என்று கூறினார்.
அவர் அறிவிப்பு வெளியிட்டு 3 ஆண்டுகள் கழிந்து விட்டது. 2021 தேர்தலுக்கும் இன்னும் ஓராண்டு தான் உள்ளது. இதனால் ரஜினி கட்சியை ஆரம்பிப்பது எப்போது? அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்போது? இல்லாவிட்டால் கட்சி தொடங்காமலே வழக்கம் போல போக்கு காட்டி விடுவாரா? என மீண்டும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. தனது மன்ற நிர்வாகிகளைக் கூட கடந்த ஓராண்டுக்கும் மேலாக சந்திக்காமலும் இருந்து வந்தார்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறும் என 2 நாட்களுக்கு முன் திடீரென அறிவிப்பு வெளியானது. இதனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கட்சி தொடங்குவது பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்டது.

இதனால், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. ரஜினி என்ன அறிவிக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் மண்டபத்தின் வெளியே ரசிகர்கள் திரண்டிருந்தனர். உள்ளே 36 மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ரஜினி ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
12 மணிக்கு கூட்டம் முடிந்தவுடன் ரஜினி செய்தியாளர்களை சந்திப்பார்; முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என பெரும் எதிர்பார்ப்பில் மீடியாக்காரர்கள் குவிந்து காத்துக் கிடந்தார். ஆனால் மண்டபத்தில் இருந்து வெளியேறிய ரஜினி, யாரையும் சந்திக்காமல் காரில் ஏறி வீட்டுக்கு பறந்து விட்டார். இதனால் மண்டபத்துக்கு வெளியே காத்துக் கிடந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ரஜினி, மன்ற நிர்வாகிகள் பொறுப்பாக செயல்பட வேண்டும். ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக் கூடாது. மாவட்டத்தின் மற்ற நிர்வாகிகளையும் கண்காணிக்க வேண்டும் என்ற ரீதியில் அறிவுரைகள், ஆலோசனைகள், சில எச்சரிக்கைகளை விடுத்தாராம்.
கட்சி தொடங்குவது மற்றும் மாவட்ட வாரியாக மாநாடு நடத்துவது குறித்தும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுடனும் தனித்தனியாக சம்பிரதாயத்துக்கு சில கேள்விகளை மட்டும் ரஜினி கேட்டதாகவும் மற்றபடி முக்கிய விவாதங்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினியின் இன்றைய ஆலோசனை கூட்டமும் உப்புச் சப்பில்லாமல் புஸ்வாணமாகி விட்டது என்றே கூறலாம்.





