பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அறிவிக்காதது ஏமாற்றம்..! அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பு அதிருப்தி!!
தமிழக அரசின் 2020 – 2021ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்வது குறித்த அறிவிப்பு இல்லாதது வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா .அருணன் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக அரசின் 2020 – 2021ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.
அதில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு ரூ.34,818 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடியும் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது,

அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதற்கான அறிவிப்பு மற்றும் பணிக்கொடை வழங்குவதற்கான அறிவிப்பும் இடம்பெறும் என்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர் .னால் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி ஒதுக்கீடு செய்து அதில் தனியார் பள்ளிகளில் 25% விழுக்காடு ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.644 கோடி ஒதுக்கி இருப்பது தனியார் பள்ளிகளை இன்னும் ஊக்கப்படுத்தி, அரசு பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக மூட வழிவகை செய்வதாகவே எண்ணத் தோன்றுகிறது.
தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஒதுக்கீடு செய்யும் நிதியை அரசு பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கீடு செய்தும், மாணவர்களை நல்ல முறையில் கல்வி கற்க ஆசிரியர்களை முழு சுதந்திரம் அளித்து செயல்பட வைத்தாலே அரசுப் பள்ளிகளில் அனைத்து தரப்பு பெற்றோர்களும் அரசுப் பள்ளிகளில் தன் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை காட்டிலும் சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

மேலும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கவும் மற்றும் சென்ற ஆண்டு போராட்டக் காலத்தில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது வழக்கு மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, தமிழக முதல்வர் இக்கூட்டத் தொடரிலேயே 110 விதியின் கீழ் அறிவிப்பார் என்றும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றோம்.
தமிழக முதல்வர் எங்கள் நியாயமான கோரிக்கையை ஏற்று நிறைவேற்றித் தர தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




