சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் பேரணியில், போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது போராட்டத்தை தீவிரமடையச் செய்து விட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் நள்ளிரவில் போராட்டம் வெடித்து ஒரே நாளில் தீயாக பரவி களேபாரமாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் பலவும் இந்த சட்டத்தை எதிர்க்கின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன.
இந்த சட்டத்தால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம் என்று அச்சம் அடைந்துள்ள இஸ்லாமியர்களும் பேரணி, ஆர்ப்பாட்டம், கண்டன பொதுக் கூட்டம் என பல்வேறு வகையான போராட்டங்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி சென்னை வண்ணாரப்பேட்டையில், நேற்று மாலை இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கண்டன பேரணி நடத்தினர்.
பேரணி முடிவில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் இரவு 8 மணிக்கு மேலும் போராட்டத்தை தொடர்ந்தனர். ஏராளமான பெண்களும் திரண்டிருந்த இக்கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு போலீசார் கெடுபிடி செய்ய, இரு தரப்புக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டு பிரச்னையானது. இதனால் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்த, போராட்டக்காரர்களும் பதிலுக்கு கற்களை வீசி தாக்க அந்த இடம் போர்க்களமானது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலரை போலீசார் வலுக்கட்டாயமாக அடித்து உதைத்து இழுத்துச் சென்று போலீஸ் வேன்களில் ஏற்றினர். இப்படி 200 பேருக்கும் மேற்பட்டவர்களை கைது செய்வதாகக் கூறி வம்படியாக இழுத்துச் சென்று கல்யாண மண்டபங்களில் அடைத்தனர். இந்த போலீஸ் தடியடி மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தொடர்ந்து விரட்டியடிக்க முயன்றாலும், யாரும் கலைய மறுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். போலீஸ் தடியடி மற்றும் கைது நடவடிக்கையைக் கண்டித்து ஆவேசக் குரல் எழுப்பத் தொடங்க போராட்டம் தீவிரமானது.சென்னை வண்ணாரப் பேட்டையில் போலீஸ் நடத்திய தடியடி சம்பவம் பற்றிய தகவல் தமிழகம் முழுவதும் பரவ நள்ளிரவு நெருங்கும் வேளையில் பல நகரங்களிலும் போராட்டங்களும் தீயாய் வெடித்தது.
சென்னை நகரின் பல இடங்கள் மட்டுமின்றி, மதுரை, கோவை, நெல்லை, குமரி, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி என பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவதுமே நள்ளிரவில் போராட்டங்கள் வெடித்து, தீவிரமடைந்ததைக் கண்டவுடன் போலீசார் உயர் அதிகாரிகள் பதறி விட்டனர் போலும்.
சென்னை வண்ணாப் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சு நடத்த கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்றார். கைதானவர்களை விடுதலை செய்வதாகக் கூறி சமாதானம் செய்தாலும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். சாலையில் படுத்துறங்கி விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்தனர். விடிந்தவுடன் மீண்டும் போராட்டம் தீவிரமாகியுள்ளது.தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு மறியல் நடைபெற்ற நிலையில், இன்று போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
-
இந்நிலையில், போலீசார் நடத்திய தடியடியால் சிஏஏக்கு எதிரான போராட்டம் எதிர்பாராத வகையில் வேறு திசையில் தீவிரமடைந்து தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தப் போராட்டத்தை சமாளிப்பது மற்றும் முடிவுக்கு கொண்டு வருவது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், சென்னை கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.