--- --:--:-- --

‘அடாவடி வட்டி’ கறார் வசூல்…! கமிஷன் கறக்கும் அதிகாரிகள்..!! திருப்பூர் TMB வங்கிகிளையில் இப்படியும் மோசடி!!

60a63062-6017-4f43-8b12-81bb74620157

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாகட்டும், தனியார் வங்கி களாகட்டும், குறைந்த லாப நோக்கில் மக்களுக்கு சேவை வழங்குவதை கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். இப்படித்தான் வங்கிகள் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கியும் பல கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைபடுத்தி வருகிறது.

 

எனவே தான் பொதுமக்கள், சிறு வியாபாரிகள் முதல் பெரு முதலாளிகள் வரை வங்கிகளை முழுமையாக நம்புகின்றனர். வங்கிகளும் விவசாய கடன், தொழில் கடன், வீடு கட்ட கடன், வாகன கடன், நகைக் கடன், தனி நபர் கடன் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வட்டி விகிதங்களை நிர்ணயித்து கடன் வழங்குகின்றன.

 

குறைந்த வட்டியில் நீண்ட கால கடனாக, விவசாயிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்க பல வங்கிகள் உள்ளது. ஆனால் தொழில் கடன், வாகன கடன் என வழங்கும்போது குறைந்த வட்டி என ஆசைகாட்டி கடன் வழங்கி விடுகின்றனர். பின்னர் தங்கள் இஷ்டத்துக்கு வட்டி விகிதத்தை கூடுதலாக்கி பல தில்லுமுல்லு வேலைகளை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி, ஏமாளிகளாக்குவது தொடர்கதையாகிவிட்டது போலும்.

 

அதுவும் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும், தனியார் வங்கிகள் இப்படியான மோசடித்தனங்களை பல வழிகளில் அரங்கேற்றி வாடிக்கையாளர்களை இழிச்சவாயர்களாக்குகின்றன. கடன் வாங்கியவர்களை, கந்து வட்டிக்காரர்களை விட மோசமாக அதிகாரத்துடன் கசக்கிப் பிழிவதையும், சில வங்கிகளில் அதிகாரிகளே தனிப்பட்ட முறையில் மோசடிகளில் ஈடுபடுவதும் போன்ற பகீர் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

 

இப்படியான ஒரு மோசடி தான் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) யின் , திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கிளையில் அரங்கேறி ,அம்பலத்துக்கு வந்து அசிங்கப்பட்டு நிற்கிறது. TMB வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் தொழில் செய்வோர், வியாபாரிகளாகவே இருந்து வருகிறார்கள். அதனால்தான் இந்த வங்கியை வியாபாரிகளின் வங்கி என்று கூட அழைப்பதுண்டு. வியாபாரிகளில் பெரும்பாலானோர் TMB வங்கியை நாடுவதற்கு காரணம், இங்கு கடன் வழங்குவது முதல் வாடிக்கையாளர்களுக்கான அனைத்து சேவை நடைமுறைகளும் விரைவாகவும், எளிதாகவும் இருக்கும் என்பதால் தான்.

 

இப்படித்தான் ஊத்துக்குளி ஒன்றியத்தில் உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே ஹோட்டல் நடத்தும் தொழிலதிபர் சுப்புராமன் இந்த வங்கியில் பல ஆண்டுகளாக கணக்கு வைத்திருந்தார். இவருடைய வரவு செலவு மற்றும் நற்பெயரை கருத்தில் கொண்டு, தொழில் அபிவிருத்திக்காக கடன் தர TMB வங்கி முன் வந்தது. கடந்த 2014-&ம் ஆண்டில் 13.5% வட்டியில் ரூ.60 லட்சம் கடனும், 2015&-ம் ஆண்டில் 13.25% வட்டி விகிதத்தில் ரூ.40 லட்சம் என ரூ.1 கோடி கடன் பெற்றார்.

இதற்காக சுப்புராமன் மாதாமாதம் வட்டித் தவணை (EMI) தொகையை முறையாக செலுத்தி வந்துள்ளார். தொடர்ந்து 5 ஆண்டுகளில் ரூ.1 கோடியே 4 லட்சம் வரை தவணை செலுத்தியுள்ளார். இந்தநிலையில் கடந்தாண்டு, வங்கிக்கு சென்ற அவர் அங்கிருந்த மேலாளர் மனோகரிடம் சென்று இன்னும் எவ்வளவு கடன் பாக்கி செலுத்த வேண்டும் என விசாரித்தார். அப்போது வங்கி மேலாளர் கூறிய வட்டி விகித தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அதாவது வட்டியை 13.25%, மற்றும் 13.50% என்பதற்கு பதிலாக 18% என்ற விகிதத்தில் சகட்டுமேனிக்கு வசூல் செய்ததை அறிந்து பதறிப் போனார்.

 

இப்படி கூடுதலாக வட்டித் தொகை மட்டும் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வசூலித்தது குறித்து வங்கி கிளை மேலாளர் மனோகரனிடம் கேட்டதற்கு அப்படித்தான் என்ற ரீதியில் தெனாவட்டாக பதிலளித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுப்புராமன் TMB வங்கியின் பொது மேலாளர், மண்டல மேலாளர் என உயர் அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் உரிய பதிலோ, நியாயமோ கிடைக்கவில்லை.

 

இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் வங்கி, மத்திய நிதியமைச்சகம், வங்கிகளின் முறைகேடுகளை விசாரிக்கும் Banking Ombudsman அமைப்புகளுக்கு சுப்புராமன் புகார்களை ஆதாரங்களுடன் தட்டி விட, உடனே விசாரணை விறுவிறுப்பாகியுள்ளது. இதனால் தங்கள் தரப்பு தவறு வெளிப்பட்டுவிடுமே என பதறிப் போயுள்ளது TMB தரப்பு.

 

உடனே வங்கியின் மண்டல மேலாளர், பொது மேலாளர், கிளை மேலாளர் என ஒட்டுமொத்த அதிகாரிகளும் சுப்புராமனை தாஜா செய்யும் வகையில் நேரடியாக அவரிடம் வந்து கெஞ்சி கூத்தாடியுள்ளனர். கடந்த 2018& – 19 நிதியாண்டில் மட்டும் கூடுதலாக வசூலித்த வட்டித்தொகை ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்தை உடனடியாக சுப்புராமன் கணக்கில் திரும்ப வரவு வைத்து கொடுத்துள்ளனர். மீதியை அடுத்தடுத்து சரிக்கட்டுவதாக கூறி சமாளித்து வந்தனர்.

“இப்படி ரூ 4.47 லட்சத்தை சுப்புராமன் கணக்கில் வரவு வைத்த அடுத்த நிமிடம், பெருமாநல்லூர் TMB வங்கி கிளை மேலாளர் மனோகரன் நடத்திய திருவிளையாடல் தான் மகா மோசடியின் உச்சகட்டமாகிவிட்டது. மனோகரனும் அவருடைய மகனும் சேர்ந்து கோவையில் தனியாக நடத்தி வரும் காகித தொழிலுக்கு அவசரமாக ரூ.1 லட்சம் தேவைப்படுவதாகவும், கடனாக தந்தால் 4 மாதத்தில் திருப்பித் தருவதாகவும் கூறி சுப்புராமனின் மனதை மாற்றி ரூ 1 லட்சத்தை நைசாக கறந்துவிட்டனர்.”

 

பின்னர் வங்கி கிளை மேலாளர் மனோகரனுக்கு கொடுத்த கடனை 4 மாதம் கழித்து சுப்புராமன் திருப்பிக் கேட்க அவரை அலைக்கழித்தது மட்டும் இல்லாமல், அவருக்கு பல்வேறு சோதனைகளை கொடுக்கத் தொடங்கினர். இந்த சோதனைகள் கொஞ்ச நஞ்சமில்லை. இங்கு தான் TMB வங்கி அதிகாரிகள் நடத்தும் மோசடிகளும், திருவிளையாடல்களும் அம்பலத்துக்கு வந்தது.

 

அப்படி என்ன மாதிரி மோசடிகள் TMB வங்கி அதிகாரிகளால் சுப்புராமனுக்கு நடத்தப்பட்டது? சுப்புராமன் அடுத்தடுத்து சந்தித்த சோதனைகள் என்ன? இது மட்டுமின்றி வாகனக் கடன் வழங்கி விட்டு, முழு கடனையும் வசூலித்து விட்டும் தங்கள் வசம் உள்ள வாகன சாவியை கொடுக்காமல் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதையும் நமது அடுத்து வரும் குற்றம் குற்றமே இதழை புரட்டிப்பார்த்தால் விபரம் தெரியும்….

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon