ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் தினசரி மார்க்கெட் இடமாற்றம்…! வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பழைய பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள, தினசரி மார்க்கெட் 29 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படுகிறது.
தற்போது 2.23 ஏக்கர் பரப்பில் 395 கடைகள் உள்ளன. இவற்றை இடித்து விட்டு, தரைத் தளத்தில் 222 கடைகள், முதல் தளத்தில் 174 கடைகள், பொதுக்கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம் மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகிய வசதிகளுடன் புதிதாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக தற்போது தினசரி மார்கெட்டில் செயல்படும் 395 கடைகளை பல்லடம் ரோடு, ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில், தற்காலிக கடைகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. மேலும், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு இயங்கி வந்த வளாகத்தில் மார்க்கெட் கடைகள் தற்காலிகமாகச் செயல்படும் வகையில், மாற்று ஏற்பாடும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் மார்க்கெட் கடைகள் இந்த இரு வளாகங்களுக்கு இடமாற்றம் செய்து, கட்டுமானப் பணி துவங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதை ஒட்டி மார்கெட் குத்தகை தாரருக்கு முறையான நோட்டீஸ் வழங்கப்பட்டு அதை பிப்ரவரி 10ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் 10ம் தேதியான நேற்று மார்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் ஒன்றினைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை காலி செய்யாமல் கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.





