டிஎன்பிஎஸ்சி முறைகேடு : ஊழியர்களுக்கு மட்டுமே தொடர்பா..? பெரும்புள்ளிகள் சிக்குவது எப்போது.?
தமிழகத்தையே உலுக்கியுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் என இதுவரை 25 பேர் சிக்கியுள்ளனர்.இந்த முறைகேட்டில் இவர்களுக்கு மட்டும் தான் சம்பந்தமா? இதில் தொடர்புடைய அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படாது செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தோண்டத் தோண்ட பூதம் கிளம்புவது போல் குரூப் -2 குரூப் 2 ஏ குரூப் 1 தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெற்ற தகவல்கள் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 99 பேர் வசமாக சிக்கி அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் என இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜெயக்குமார் என்ற இடைத்தரகர் மற்றும் சித்தாண்டி என்ற காவல்துறை எஸ்.ஐ ஆகியோர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடும்படி தொடர்கிறது .
குரூப்-4 தேர்வு போல் குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு உறுதி செய்யப்பட்டு அதிலும் இதுவரை 9 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வில் தேர்வர்கள் சில மணி நேரத்தில் அழியும் மை கொண்ட பேனா மூலம் தேர்வு எழுதி, பின்னர் விடைத்தாள்கள் கொண்டு செல்லப்பட்ட வேனை நடுவழியில் நிறுத்தி, தேர்வுத் தாளில் திருத்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் குரூப் 2ஏ தேர்விலோ, வெறும் 20 கேள்விகளுக்கு விடை எழுத வைத்து அதனை கோட்வேர்டாக பயன்படுத்தி பின்னர் தேர்வுத் தாளில் முறைகேடு செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இந்த முறைகேடு வினாத்தாள் திருத்தும் மையத்தில் நடத்தப்பட்டதாக பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தொடர் முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமான நிலையில், இதுவரை சாதாரண அரசு ஊழியர்கள், இடைத்தரகர்களாக செயல்பட்டோர் மட்டுமே கைது செய்யப்பட்டு வருகின்றனர். ரூ.பல கோடிகள் வரை கைமாறியுள்ள இந்த மோசடியில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லையா? இதுவரை யாரும் சிக்காதது ஏன்? என இப்போது கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
இந்தத் துறையின் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஜெயக்குமார் மீதே திமுக எம்.பி. தயாநிதி மாறன் புகார் கூறியுள்ளார். இந்த வழக்கை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெரும் புள்ளிகள் மற்றும் உயர் அதிகாரிகள் சிக்காதது ஏன்? என்ற கேள்விகள் எழுப்பப்படுவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.





