பி.எஸ்.என்.எல் அம்போ தானா..? இன்று ஒரே நாளில் 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு!!!
மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து இன்று ஒரே நாளில் 92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வில் செல்கின்றனர்.நாடு முழுவதும் உள்ள மொத்த ஊழியர்களில் 51 சதவீதம் பேர் வெளியேறுவதால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எதிர்காலம் என்னாகுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீப காலமாக மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், நலிவடைந்து ஒவ்வொன்றாக மூடு விழா காண்கின்றன. சில நிறுவனங்கள் தனியார் வசம் கைமாறும் அவல நிலை உருவாகியுள்ளன.இந்த நிலையில் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் , ஏராளமான கடனில் மூழ்கி, சமீப காலமாக தள்ளாட்டம் போட்டு வந்தது.
இந்தியாவில் முதன் முதலில் டிரிங்..டிரிங்.. தொலைபேசியை கொண்டு வந்த இந்த பிஎஸ்என்எல் நிறுவனம், தொலைத் தொடர்புத் துறையில் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தது. ஆனால் என்றைக்கு இந்தத் துறையில் தனியார் நிறுவனங்கள் காலடி எடுத்து வைத்தனவோ, அது முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் சரிவை நோக்கி பயணித்தது.கடனிலும் தத்தளிக்க ஆரம்பித்தது.

நாளடைவில், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. இதனால் பிஎஸ்என்எல் மூடப்பட உள்ளதாக கூறப்பட்டது.இந்நிலையில் ஊழியர்களை குறைப்பதன் மூலமாவது மீள முடியுமா? என முடிவு செய்து, 50 வயதை கடந்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் அறிவித்தன.
சம்பளமே முறையாக கிடைக்காத நிலையில், கையில் கணிசமான தொகையும் கிடைக்கிறது என்பதால் ஊழியர்கள் பலரும் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர்.
இப்படி விண்ணப்பித்த 92 ஆயிரம் பேர் இன்று விருப்ப ஓய்வில் செல்கின்றனர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78,569 பேர் ஆவர். எம்டிஎன்எல் நிறுவனத்தில் 14,378 பேரும் வீட்டுக்கு செல்கின்றனர். ஒட்டுமொத்த ஊழியர்களில் 51 சதவீதம் பேர் விருப்ப ஓய்வில் செல்லும் நிலையில் பிஎஸ்என்எல் நிலை என்னாகுமோ? என்ற பரிதாபத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




